கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) -- பதின்ம வயதினரிடையே முரட்டுத்தனமும் எளிதில் கோபம் கொள்ளும் குணமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், 2022-இல் இருந்து 2024-ஆம் ஆண்டிற்கு இடையே இப்பிரிவினர் மத்தியில் 27 விழுக்காட்டு வன்முறை அதிகரிப்பையும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் பதிவு செய்துள்ளது.
இதற்கு, பகடிவதை, இணையப் பயன்பாடு, இணையப் பாதுகாப்பு குறைப்பாட்டினால் உண்டாகும் அச்சுறுத்தல் போன்ற பல காரணங்கள் முன்வைக்கப்படும் நிலையில், சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இச்சிக்கலை கையாள்வதற்கான வழிகள் குறித்து பகிர்ந்து கொள்கின்றார், மனநல மருத்துவர் டாக்டர் சிவநந்தினி பூரண விஸ்வநாதன்.
2010-ஆம் ஆண்டிற்கு முன்பைக் காட்டிலும், அக்காலக்கட்டத்திற்கு பின்னர் வளர்ந்து வரும் பதின்ம வயதினர் நிலையற்ற உணர்ச்சியையும் அதிக விரக்தியையும் எதிர்கொண்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அண்மையக் காலமாக, பதின்ம வயதினரிடையே நாட்டில் நிகழும் குற்றச்செயல்களும் இதற்கு சான்றாக அமையும் வேளையில் அதற்கான அடிப்படை காரணங்களை விளக்குகின்றார் டாக்டர் சிவநந்தினி.
''இது சமூகத்தின் பிரச்சனை. வீடு, பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் சுற்றுப்புறம், அதாவது அண்டை அயலார் உட்பட பொதுமக்களும் இதற்கு காரணமாகின்றனர். இது இப்போது தொடங்கிய ஒரு பிரச்சனையாக இருக்காது. பல ஆண்டுகளாக அவர்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பிரச்சனை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமலும் கையாள தெரியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலும், அது முரட்டுத்தனத்திற்கு வழிவகுக்கிறது,'' என்றார் அவர்.
இதனால், இப்பிரிவினர் தங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்ளை அதாவது தெரியாத உறவுகளை இணையம் வழி நாடி பேசுவதற்கும், அவர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கிக்கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகுவதாக டாக்டர் சிவநந்தினி விவரித்தார்.
அதுமட்டுமின்றி, தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனையையோ அல்லது தனிமையையோ பகிர்ந்துகொள்ள நம்பத்தகுந்தவரை அடையாளம் காண முடியாத பட்சத்தில் முரட்டுத்தனத்தையும் வன்முறையையும் இந்தப் பதின்ம வயதினர் கையில் எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார்.
இந்நிலையில், இப்பிரச்சனையை எதிர்நோக்கும் ஒருவரிடம் காணப்படும் அறிகுறிகள் குறித்தும் டாக்டர் சிவநந்தினி தெளிவுப்படுத்தினார்.
''திடீரென தனிமையாகவோ அமைதியாகவோ இருந்தால் அவர்களை நாடி உரையாட வேண்டும். அவர்களை பள்ளியில் உள்ள மனநல ஆலோசகரிடம் கூட அனுப்பலாம்,'' என்றார் அவர்.
ஒரு மனிதனின் குணமும் போக்கும் வீட்டிலிருந்தே தொடங்குவதால் இப்பிரச்சனையைக் கையாள்வதில் பெற்றோரின் பங்கு அளப்பரியதாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
''கணவன் மனைவி இடையே பிரச்சனை என்பது வழக்கமான ஒன்று. ஆனால், அச்சூழல் உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குரலை உயர்த்தி பேசுவதோ அதட்டி பேசுவதோ வழக்கமானது என்று பிள்ளைகளின் மனதில் ஒருபோதும் பதியக்கூடாது. ஆரோக்கியமான உரையாடலே சிறந்தது என்று அவர்களுக்கு தெரிய வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். தினசரி ஒரு முறையாவது ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் பேசுங்கள். அது மிக முக்கியம்,'' என்று அவர் விளக்கினார்.
அதுமட்டுமின்றி, தூக்கப் பற்றாக்குறை கூட பதின்ம வயதினரிடையே முரட்டுத்தனத்தை உருவாக்கும் என்பதால், தங்கள் பிள்ளைகளுக்கு போதுமான உறக்கம் இருப்பதையும் ஒவ்வொரு பெற்றொரும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]