பத்துமலை, ஜனவரி 30 (பெர்னாமா) -- பத்துமலையில் மின்படிக்கட்டு அமைக்கும் விவகாரத்தைச் சர்ச்சையாக்க வேண்டாம்.
மாறாக, மாநில மெந்திரி பெசாருடன் கலந்து பேசி இவ்விவகாரத்திற்குச் சுமூக தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் வைத்த கோரிக்கைக்கு தாம் இணங்குவதாகக் கோலாலம்பூர் மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
''பத்துமலையில் மின்படிக்கட்டு அமைக்கும் விவகாரத்தைச் சர்ச்சையாக்க வேண்டாம் எனத் தெரிவித்த பிரதமர், மிக விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக வரும் ஜூலை மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.'' என்றார் டான் ஸ்ரீ ஆர். நடராஜா.
தைப்பூசத்தை முன்னிட்டு முன்னேற்பாட்டு வேலைகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை மேற்கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டான் ஸ்ரீ நடராஜா அவ்வாறு கூறினார்.
இதனிடையே, பத்துமலை முருகன் திருத்தலத்தையும் உட்படுத்தி இருக்கும் கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், R-O-S எனப்படும் சங்கங்களுக்கான பதிவு இலாகாவில் பதிவு செய்யாமல்,
தேசிய சட்டத்துறைத் தலைவரின் நேரடி மேற்பார்வையில் பதிவு பெற்றிருக்கும் ஓர் அறக்கட்டளையாக இருப்பதை முன்னிறுத்தி அவ்வாலயத்தில் மேற்கொள்ளப்படவிருந்த மின்படிகட்டு உருவாக்கத்திற்கு மாநில அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)