ஈப்போ, 26 ஜனவரி (பெர்னாமா) -- பேராக், ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் உட்பட அம்மாநிலத்தில் உள்ள 11 ஆலயங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படவிருக்கின்றது.
அக்காலக்கட்டம் முழுவதும், காவடிகள் சுமந்து செல்லும் வழிகளில் உள்ள கடைகளிலும், மக்கள் கூடும் கடை பகுதிகளிலும், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக, பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவனேசன் தெரிவித்தார்.
மூன்று நாள்களுக்கு அமல்படுத்தப்படும் இத்தடை தொடர்பில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ஊராட்சி மன்றங்கள் அறிக்கை வெளியிடும் என்று டத்தோ சிவநேசன் கூறினார்.
அதேவேளையில், மது அருந்திவிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
''மது அருந்திவிட்டு இரதம் செல்லும் வழியிலும் பக்தர்கள் செல்லும் பாதையிலும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் போலீஸ் உடனடியாகக் கைது செய்யும். எந்த சமரசம் காணப்படாது,'' என்றார் அவர்.
இதனிடையே, பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கான அபராதம் விதிக்கப்படும் சட்டம் தைப்பூசக் காலக்கட்டத்திலும் அமல்படுத்தப்படும் என்று சிவனேசன் சுட்டிக்காட்டினார்.
''குப்பை போட்டால் 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். பின்னர் என்னிடம் வந்து மேல்முறையீடு செய்யாதீர்கள். நான் உதவ முடியாது,'' என்றார் அவர்.
இன்று, பேராக் மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களை அளித்தார்.
பேராக்கில், கம்போங் கெப்பாயாங் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம், சுங்கை சிப்புட், சித்தியாவான், தாப்பா, தைப்பிங், தஞ்சோங் ரம்புத்தான், தாப்பா ரோட், பூலோ ஆக்கார் தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]