Ad Banner
 பொது

தி.எல்.டி.எம் அதிகாரிக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 2 தங்கும் விடுதிகள் பறிமுதல்

26/01/2026 05:28 PM

கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) -- அரச மலேசிய கடற்படை தி.எல்.டி.எம்  திட்டங்களின் கொள்முதலில் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான Op Layar நடவடிக்கையின் மூலம், தி.எல்.டி.எம்-மின் மூத்த அதிகாரிக்கு சொந்தமானது என்று நம்பப்படும் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு தங்கும் விடுதிகளை, எஸ்.பி.ஆர்.எம் கைப்பற்றியுள்ளது.

அதோடு, மொத்தம் ஏழு லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஏழு நிறுவனக் கணக்குகளையும், பல தனிநபர்களுக்குச் சொந்தமான 14 வங்கிக் கணக்குகளையும் எஸ்.பி.ஆர்.எம் கைப்பற்றியது.

தி.எல்.டி.எம்-இன் மூத்த அதிகாரிகளுக்கு நெருக்கமான நிறுவனங்களை பரிந்துரைப்பதிலும் நியமிப்பதிலும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

எஸ்.பி.ஆர்.எம்  புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட விசாரணையில், கேள்விக்குரிய சில நிறுவனங்களின் விலை மதிப்பீட்டு ஒப்பந்தம் உள்ளதா என்பதை சரிபார்க்க, தேசிய கணக்காய்வு துறையுடன் எஸ்.பி.ஆர்.எம்-மின் புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டது.

மேலும், சந்தேக நபருக்குச் சொந்தமான பிற சொத்துகளையும், அவருடன் கூட்டுச் சேர்ந்த நிறுவனங்களின் உரிமையாளர்களையும் தற்போது எஸ்.பி.ஆர்.எம் கண்காணித்து வருகிறது.

இவ்விவகாரம் குறித்து பெர்னாமா தொடர்புக் கொண்ட போது, எஸ்.பி.ஆர்.எம் புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் அத்தகவல்களைக் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)