ஜார்ஜ்டவுன், 29 ஜனவரி (பெர்னாமா) -- பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட முயற்சி ஒன்று, இன்று ஆன்மிக சேவையாக மாறியுள்ளது.
தைப்பூசத் திருநாளின் பிரதான அம்சமான காவடியைப் பொழுதுபோக்காகத் தயாரிக்கத் தொடங்கிய, பாயா தெருபோங், ஜார்ஜ்டவுன், பினாங்கை சேர்ந்த பிரகலாதன் காசிநாதன் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் கடந்த 21 ஆண்டுகளாக அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
Styrofoam எனப்படும் நுரைப்பத்தை மட்டுமே பெருமளவில் பயன்படுத்தி தங்கள் தரப்பு காவடியைத் தயாரித்து வருவதாக பினாங்கு மாநகராண்மைக் கழகத்தின் முழுநேர பணியாளரான பிரகலாதன் தெரிவித்தார்.
''தாள்களில் மட்டுமே வரைந்து, எந்தவித தீவிரமும் காட்டாமல் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி. முன்பு, பஞ்சு, ரோத்தான் போன்ற பொருள்களினால் தயாரிக்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு அதனை யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. நுரைப்பத்தைப் பயன்படுத்தி நாங்களே கற்றுக்கொண்டோம்,'' என்றார் அவர்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் காவடிகளைத் தயாரித்து வருவதாகக் கூறிய அவர், ஒரு காவடியை உருவாக்குவதற்கு தங்களுக்கு ஐந்து முதல் ஏழு நாள்கள் வரை கால அவகாசம் எடுக்கும் என்று விவரித்தார்.
வடிவமைப்பைப் பொருத்தே ஒவ்வொரு காவடியின் விலை நிர்ணயிக்கப்படும் நிலையில், இறை அம்சங்களை மட்டுமே முன்னிறுத்தி அவற்றை வடிவமைப்பதாக பிரகலாதன் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு 21 காவடிகளை தயாரித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]