கோலாலம்பூர், ஜனவரி 30 (பெர்னாமா) -- இன்னும் இரு நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, அவ்விழாவை தனக்கென உரித்தான பாணியில் வரவேற்கும் முயற்சியில், ஓவியக் கலைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
புனித நதிகளான கங்கை, காவிரியில் இருந்து நீரைப் பயன்படுத்தி, அதனுடன் வெள்ளி உட்பட இதர வகை சாயங்களை கலந்து, ராஜாத்தா ஸ்கந்தா எனும் முருகக் கடவுளின் அழகுறு ஓவியத்தை வரைந்துள்ளார், ஓவியக் கலைஞர் என். நரேஷ் பாபு.
தமது இம்முயற்சி வெறும் ஓவியமாக மட்டுமல்லாமல், நம்பிக்கை, பக்தி மற்றும் தமிழ்ப் பண்பாட்டை ஒன்றிணைக்கும் ஓர் ஆன்மீக முயற்சி என்றும் நரேஷ் பாபு விவரித்தார்.
அதனாலேயே, நேர்மறை ஆற்றலை அதிகம் ஈர்க்கும் வெள்ளி உலோகத்தைத் தேர்ந்தெடுத்து இந்த ஓவியத்தை உருவாக்கியதாக அவர் கூறினார்.
''முருகப் பெருமான் வெள்ளி, மெட்டலிக் கலந்த நிறத்தில் இருந்தால் எவ்வாறு இருப்பார் என்று எனக்குள் எழுந்த கேள்வியே இந்த ஓவியத்தின் தொடக்கம். வெள்ளி என்பது நம் கலாச்சாரத்தில் கலந்த ஒன்று. பக்தி, புனிதம், தெய்வீகத்தை ஈர்க்கக்கூடியது வெள்ளி. எனவே, ஒரு கலைப்படைப்பாக உருவாக்கிப் பார்ப்போம். தைப்பூசத்திற்குள் முடித்து விடுவோம் என்று நினைத்தேன்,'' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, தமிழ்க் கடவுள் கந்தனின் தந்தையான சிவபெருமானின் அனுக்கிரகமும் தாம் முன்னெடுத்த முயற்சிற்குக் கிட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன், அவரின் ஓர் அடையாளமாகக் கருதப்படும் கங்கை நதியிலிருந்து நீரைக் கொணர்ந்து, அதனையும் தமது ஓவியத்தில் கலந்துள்ளார் நரேஷ் பாபு.
''முருகனுடன் எப்படி தொடர்புப்படுத்துவது என்று சிந்திக்கும்போது தான் கங்கை நீரைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதினேன். அதேவேளையில், தென்னிந்திய தொடர்பில் இதில் இருக்க வேண்டும் என நினைத்து காவிரி நீரையும் சேர்த்தேன்,'' என்றார் அவர்.
இந்த ஓவியம் முருகனாக மட்டுமல்லாமல், சிவனின் திருவுருவமாகவும் தெரிவதாக, தமது ஓவியத்தைப் பார்த்தவர்கள் கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது, ஒரு கலைப்படைப்பாக இல்லாமல் ஒரு கலாச்சாரக் கதையாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாக, கடந்த ஆறு ஆண்டுகளாக ஓவியத் துறையில் ஈடுபட்டு வரும் நரேஷ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)