பத்துமலை, ஜனவரி 30 (பெர்னாமா) -- வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளுக்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிடும் பொருட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிலாங்கூர் பத்துமலைக்கு வருகைப் புரிந்தார்.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்து இந்துக்கள் அதிகம் கூடும் இடமான ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை அவர் பார்வையிட்டார்.
மாலை மணி 2.30 அளவில் ஆலய வளாகத்தை வந்தடைந்த பிரதமரை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷரி மற்றும் ஆலய நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
சுகாதாரப் பரிசோதனைகள் உட்பட வருகையாளர்களுக்குச் சேவை வழங்கும் பல முகப்புகள் மற்றும் அமைச்சின் முகப்பு அமைந்திருந்த பகுதியைப் பிரதமர் பார்வையிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கு செலவிட்ட பிரதமர் பக்தர்களுடனும் தன்னார்வலர்களுடனும் அலவலாவினார்.
பின்னர் இவ்விழா எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அவர் ஆலய நிர்வாகத்தினருடன் விளக்கமளிப்பு கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)