பொது

கையூட்டு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 14 ஆண்டுகள் சிறை

06/08/2020 09:28 PM

அலோர் ஸ்டார் , 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கையூட்டு பெற்ற 2 குற்றங்களுக்காக, முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 70,000 ரிங்கிட் அபராதமும் விதித்து கெடா, அலோர் ஸ்டார் செஷன் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. 

நீதிபதி முர்த்தாஸாடி அம்ரான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சம்பவம் நடந்த காலகட்டத்தில் கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் விசாரணை இலாகாவில் பணி புரிந்த ஷம்சுல் ஷாருல் சம்சுடின் ஒப்புக்கொண்டார்.

கெடா, மெர்கோங்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி,  
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம், செக்‌ஷன் 39பி-இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஷரிஃபா அசிஸ் என்ற நபரின் கணவரான அசார் நோர்டினின் வழக்கை, செக்‌ஷன் 12-க்கு குறைப்பதற்காக, ஷரிஃபாவிடமிருந்து 7,500 ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக ஷம்சுல் மீது முதல் குற்றம் சுமத்தப்பட்டது.

மெர்கோங் கிளை பேங்க் ரக்யாட் வங்கியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி, அதே குற்றத்தைப் புரிவதற்காக 5,500 ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக 38 வயதான ஷம்சுல் மீது இரண்டாவது குற்றம் சுமத்தப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் கையூட்டு தொகையில் 5 மடங்கு அபராதம் விதிக்க வகைச் செய்யும், 2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 16(ஏ) (பி)-யின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.   

- பெர்னாமா