ஜாலான் துங்கு அப்துல் ஹலிம், ஜனவரி 29 (பெர்னாமா) -- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏவில் வெளிநாட்டவர் ஒருவரை விடுவிக்க 5 ஆயிரத்து 100 ரிங்கிட் கையூட்டாக வழங்கப்பட்டதைப் புகாரளிக்கத் தவறியதற்காகக் குடிநுழைவு அதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி ரோஸ்லி அஹ்மட் முன்னிலையில் அந்த ஏழு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டபோது 47 வயதான முஹமட் ரஹ்மத் மட் யூசோப் அதனை மறுத்து விசாரணை கோரினார்.
கே.எல்.ஐ.ஏ முனையம் ஒன்று மற்றும் இரண்டில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டவர்களுக்கான பரிசோதனையில் இருந்து விடுவிக்க வெளிநாட்டவர் ஒருவருக்கு உதவும் வகையில் மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமையகத்தில் பணிப்புரியும் கேபி22 கிரேட் கொண்ட அதிகாரியாக முஹமட் ரஹ்மட்டிற்கு இணையத்தின் மூலம் கையூட்டு வழங்கப்பட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் அல்லது போலீசாரிடம் கையூட்டுப் பெற்றது குறித்து புகாரளிக்கவும் அவர் தவறியுள்ளார்.
இந்நிலையில் அரசு தரப்பு விண்ணப்பித்த கூடுதல் நிபந்தனைகளுடன் அனைத்து குற்றங்களுக்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் முஹமட் ரஹ்மட்டை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)