Ad Banner
Ad Banner
 பொது

பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கையூட்டா? பொது பாதுகாப்பு துணை அதிகாரி மறுப்பு

17/12/2025 08:00 PM

கங்கார், டிசம்பர் 17 (பெர்னாமா) -- 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆயிரத்து 350 ரிங்கிட் மதிப்பிலான உணவு மற்றும் பான சேவையைத் தமது மனைவிக்காகப் பெறுவதற்குத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைப் பொது பாதுகாப்பு துணை அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

கங்கார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டத்தோ நுஅமான் மஹ்மூத் சுஹுதி முன்னிலையில் மொழிப்பெயர்ப்பாளர் வாசித்த அக்குற்றச்சாட்டை 45 வயதான முஹமட் ருஹைசுல் முஹமட் இசா மன்சோர் மறுத்து விசாரணைக் கோரினார்.

அக்காலக்கட்டத்தில் பெர்லிஸ் மாநில மலேசிய பொது பாதுகாப்புப் படையில் பொது பாதுகாப்பு துணை அதிகாரியாக இருந்த முஹமட் ருஹைசுல் தனது மனைவிக்காகக் கையூட்டு பெற தனது பதவியைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனது மனைவியின் நிறுவனமான சினார் ரிஸ்கி பரகாஹ் ரெசூர்க்ஸஸின் பெயரில் B-0-7-3-7 என்ற எண் கொண்ட கட்டணச் சீட்டிற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டம் செக்‌ஷன் 23ரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதே சட்டம் செக்‌ஷன் 24(1)ரின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

5 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாத்தின் பேரில் அவரை விடுவித்த நீதிமன்றம் இவ்வழக்கை அடுத்தாண்டு ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)