Ad Banner
 பொது

கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார் முன்னாள் தற்காப்பு புலனாய்வு தலைமை இயக்குநர்

29/01/2026 03:55 PM

கோலாலம்பூர், ஜனவரி 29 (பெர்னாமா) -- தமது மனைவிக்கு வெளிநாட்டிற்கான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இருபதாயிரம் அமெரிக்க டாலரையும் மொத்த கட்டணமாக 64 ஆயிரத்து 600 ரிங்கிட்டையும் கையூட்டாக பெற்றதாக மூன்று குற்றங்களுக்காக முன்னாள் தற்காப்பு புலனாய்வு தலைமை இயக்குநர் டத்தோ முஹ்மட் ரசாலி அலியாஸ் மீது இன்று கோலாலம்பூர் செக்‌ஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அம்மூன்று குற்றச்சாட்டுகளையும் 60 வயதான முஹ்மட் ரசாலி மறுத்து விசாரணைக் கோரினார்.

2024ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மலேசிய தற்காப்பு புலனாய்வு அமைப்பான எம்.டி.ஐ.ஓவிடமிருந்து இருபதாயிரம் அமெரிக்க டாலரை கையூட்டாக பெற்றதாக டத்தோ முஹ்மட் ரசாலி அலியாஸ் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மேலும், 59 வயதுடைய தமது மனைவி டாத்தின் அஸாரினா பாக்கியா-க்கு கோலாலம்பூர் மற்றும் ஸ்பெயின், மலாகா  இடையிலான இருவழி விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 26 ஆயிரத்து 800 ரிங்கிட்டை, Intelligence PC Centre நிறுவன இயக்குநர் ஷேக் ஹமட் நபிக்- இடமிருந்து பெற்றதாக டத்தோ முஹ்மட் மீது இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதோடு, தமது அதிகாரப்பூர்வப் பணியுடன் தொடர்புடையது என்று தெரிந்திருந்தும், அஸாரினா-விற்கு கோலாலம்பூர் மற்றும் எஸ்டோனியா இடையிலான இரு வழி பயண டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 37 ஆயிரத்து 800 ரிங்கிட்டை அதே நபரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜாமின் தொகை ஐம்பதாயிரம் ரிங்கிட் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்ட வேளையில், இவ்வழக்குகளின் மறுசெவிமடுப்பு வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கு முடியும் வரை கடப்பிதழை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)