Ad Banner
 பொது

சூதாட்டம் & மோசடியை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் கவலையை ஏற்படுத்துகிறது - தியோ

07/02/2026 07:40 PM

கூலாய், 07 பிப்ரவரி (பெர்னாமா) --  இணைய பயனர்களை இலக்காக கொண்டு சமூக ஊடகங்களில் சூதாட்டம் மற்றும் மோசடி குறித்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கை அதிகரித்து வருவது கவலையை அதிகரித்துள்ளது.

எம்.சி.எம்.சியிடம் புகாரளிக்கப்பட்ட பெரும்பாலான விளம்பரங்கள் பணம் செலுத்தி பிரபலப்படுத்தப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த விளம்பரங்கள், அதிக பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக சில தரப்பினர் சமூக ஊடக தளங்களுக்குப் பணம் செலுத்துவதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

புகார்களை அளித்தப் பிறகு சம்பந்தப்பட்ட தளங்கள் விளம்பரங்களை நீக்க ஒப்புக்கொண்டாலும், பொதுவாக அந்த உள்ளடக்கம் முன்னதாகவே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களைச் சென்றடைந்த பின்னரே அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தியோ வருத்தம் தெரிவித்தார்.

''தற்போதைய முக்கியப் பிரச்சினை என்னவென்றால் தொடக்கக்கட்டப் பரிசோதனை பற்றிய கேள்வி. இதுபோன்ற உள்ளடக்கம் வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தப்படுவதற்கு முன்பு ஏன் மிகவும் திறம்பட பிரித்தெடுக்கப்படவில்லை. மறைமுகமாக இணைய மோசடி மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு உதவுகிறது?'', என்றார் அவர்.

இந்த ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் இணைய சூதாட்டம் தொடர்பான 15,519 உள்ளடக்கங்களையும், மோசடி கூறுகளைக் கொண்ட 5,241 பதிவுகளையும் எம்.சி.எம்.சி நீக்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)