குளுவாங், 05 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர், குளுவாங்கின் ஜாலான் ரெங்காம் - சிம்பாங் ரெங்காம் சாலையில், கடந்த திங்கட்கிழமை, ஐவர் மரணமடைந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 19 வயது ஆடவருக்கு மீண்டும் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது கொலைச் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முஜிப் சரோஜி இன்று அந்த உத்தரவை வெளியிட்டார்.
இன்று காலை மணி 8.45-க்கு குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அந்நபர் போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.
முன்னதாக, 1987-ஆம் ஆண்டும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 42(1)-இன் கீழ் மூன்று நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்ள மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் முதலாம் தேதி ஜாலான் ரெங்காம் - சிம்பாங் ரெங்காமின் 27-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த அவ்விபத்தில், டொயொட்டா வியோஸ் ரக காரில் பயணித்த 10 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
BMW 530e ரக காரை செலுத்திய தனது அண்ணனுடன், Mercedes Benz A250 ரக காரை அந்நபர் செலுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் சிக்கிய அந்நபரின் அண்ணனும் மருத்துமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனிடையே, இவ்விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக இழப்பீடு கோருவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க இதில் சிக்கி உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
உயிரிழந்த அனைவருக்கும் நீதி கோரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இதில் பாதிக்கப்பட்ட முஹமட் அய்மான் முஹமட் ரஷிட்டின் தாயாரான ஃபுசியா அப்துல்லா தெரிவித்தார்.
எனினும், வழக்கறிஞரை நியமிக்கும் செயல்முறை உட்பட, கோரிக்கை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் தமது பிள்ளைகளிடம் ஒப்படைப்பதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]