Ad Banner
 பொது

அரசக் கழகத்தை அவமதிக்கும் பதிவு; முதியவருக்கு 4 மாத சிறை

22/04/2026 05:27 PM

சிப்பாங், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டில் தனது முகநூல் கணக்கு மூலம் அரசக் கழகத்தை அவமதிக்கும் பதிவுகளைப் பதிவேற்றியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஒரு மூத்த குடிமகனுக்கு சிப்பாங்  செஷன்ஸ் நீதிமன்றம் இன்று, புதன்கிழமை நான்கு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் தம்மீதான குற்றச்சாட்டை வாசித்தப் பின்னர், குற்றச்சாட்டப்பட்ட 64 வயதான மாட் டெருஸ் அலி இந்த வாக்குமூலத்தை அளித்தார்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பின்னிரவு மணி 2.15க்கு "Mat Derus" என்ற முகநூல் கணக்கின் மூலம், பிறரைப் புண்படுத்தும் நோக்கத்துடன், அறுவறுக்கத்தக்க தகவல்களைத் தெரிந்தே உருவாக்கி, அவற்றை அனுப்பத் தொடங்கியதாக மாட் டெருஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233(1)(a)-இன் கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில், அதே சட்டம் செக்‌ஷன் 233(3)-இன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை வழங்குவதற்கு முன்னர், 3R எனப்படும் மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான விவகாரங்களை எழுப்புவது பதற்றத்தைத் தூண்டக்கூடும் என்றும், நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அஹ்மாட் ஃபுவாட் வலியுறுத்தினார்.

மற்றொரு நிலவரத்தில், கடந்தாண்டு டிசம்பர் மாதம், தனக்குச் சொந்தமான சமூக ஊடகக் கணக்கில் தகாத முறையிலான பதிவை தொடங்கியதாகவும், அவற்றை தொடர்ந்து பதிவிட்டதாகவும், அதே நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பணி ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்தாண்டு டிசம்பர் 25-ஆம் தேதி பிற்பகல் மணி 2.30 அளவில், "Marzuki Ismail" எனும் முகநூல் கணக்கில் தெரிந்தே, பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான கருத்துகளைப் பதிவிட்டதாக, 52 வயதுடைய மர்சுக்கி இஸ்மாயில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233(1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் நிலையில்,

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஓராண்டு வரையிலான சிறை அல்லது அவ்விரண்டும் விதிக்க வகைச் செய்யும் அதேச் சட்டம் 233(3)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை, 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகையுடன், தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க அனுமதித்த நீதிமன்றம், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]