Ad Banner
 பொது

பி.பி.கே.ஐ-இன் கீழ் சீனம் & தமிழ் மொழி கற்றல் அறிமுகப்படுத்தப்படும்

23/04/2026 08:31 PM

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 23 (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு தொடங்கி சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைந்த சிறப்பு கல்வித் திட்டம் PPKI-இன் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சீனம் மற்றும் தமிழ் மொழி கற்றல் அறிமுகப்படுத்தப்படும்.

கல்வி அமைச்சின் புதிய தேசியப் பாடத்திட்டமான 2027ஆம் ஆண்டு பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

நேற்றிரவு மலாக்கா அலோர் காஜாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு மடானி கல்வி சீர்திருத்தத்தை நோக்கிய மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் இலக்கவியல் தலைமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்ட வோங் கா வோ செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும், 30 மாணவர்களைக் கொண்ட 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு, இவ்வாண்டு திறன் தொலைக்காட்சிகள் வழங்கப்படும் என்று வோங் கூறினார்.

இதனிடையே, வரும் காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த நிலையை அடைவதற்கும், அதன் தரம் உயர்வதற்கும் இது போன்ற திட்டங்கள் உதவும் என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் பழனி சுப்பையா தெரிவித்தார்.

"ஒரு சில மாதங்களுக்கு முன்னர், மித்ராவின் மூலம் நமது தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும் SMART BOARD எனும் திறன் பலகை வழங்கப்பட்டது. அச்சமயத்தில் 30 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இன்று மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் மித்ரா உதவியோடு அதனையும் அனைத்து பள்ளிகளுக்கு வழங்குவதாக வோங் கா வோ உறுதியளித்திருக்கிறார்," என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இக்கருத்தரங்கில் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் சுமார் 470 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)