Ad Banner
 உலகம்

நாளை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

22/04/2026 06:19 PM

சென்னை, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை ஏப்ரல். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தேர்தலில் இம்முறை ஆளும் கட்சியான தி.மு.க, எதிர்கட்சியான  அ.தி.மு.க, தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் மற்றும் விசில் புரட்சியை முன்னெடுத்திருக்கும் த.வெ.க என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,  சீமான், விஜய், உள்ளிட்ட தலைவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போன்ற தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

கடந்த 30 நாட்களுக்கு மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரங்கள் நேற்று மாலை மணி 6 அளவில் நிறைவடைந்தது.

இத்தேர்தலில் ஒரு கோடியே 45 லட்சத்து 90 ஆயிரம் பேர் முதல்முறை வாக்காளர்களாக பதிவு செய்திருக்கும்  வேளையில், 48 லட்சத்து 10 ஆயிரம் அஞ்சல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

234 தொகுதிகளில் ஒரு லட்சத்து 6,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதோடு மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.  

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக மாநகர் பேருந்துகளில் இலவச பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். 

மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

--பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)