புத்ராஜெயா, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட, பொது சேவை துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கை, பி.டி.ஆர் (BDR) அமலாக்கத்தின் வழி, ஒரு வாரத்திற்குள் 678,000 ரிங்கிட் மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் மொத்தம் 155,000 அரசு ஊழியர்கள் பதிவு செய்துள்ளதன் வழி, 334,000 லிட்டர் எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அந்நடவடிக்கை, அரசு ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவது மட்டுமின்றி, அரசாங்கம் தனது செயல்பாட்டுச் செலவுகளை மிகவும் திறம்படக் கட்டுப்படுத்த உதவுவதையும் இந்த அடைவுநிலைக் காட்டுவதாக டத்தோ ஃபஹ்மி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பயணத் தேவைகளையும் போக்குவரத்துச் செலவுகளையும் குறைப்பதற்காக, அதிகமான சந்திப்புக் கூட்டங்களை இணையம் வாயிலாக நடத்துவது உள்ளிட்ட செலவு சேமிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
''அதாவது, நேரடி சந்திப்புகளைக் குறைத்தல், திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்தல், மற்றும் பயிலரங்குகள் மற்றும் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முகமை அல்லது அரசாங்க வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகும்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த விளக்கக் கூட்டத்திலும், அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பிலும் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]