புதூர், 22 செப்டம்பர் (பெர்னாமா) -- தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அதன் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.
அதில், நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் நேற்று நடைபெற்றது.
தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க- பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ களமிறங்குகிறது.
இதில் வழக்கம்போல் தனி அடையாளத்துடனும், உறுதியான கொள்கை நிலைப்பாட்டுடன் நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து களம் காண்கிறார்.
ஆகவே தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.
நாம் தமிழர் கட்சி மாநாட்டை முன்னிட்டு ஆலம்பட்டி புதூரில் இருந்து திருச்சி மாநகர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், தோரணங்கள், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருச்சி மாநில மாநாட்டில் உரையாற்றிய .நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இனத்திற்காக தேர்தலில் நிற்கின்றோமே தவிர பணத்திற்காக அல்ல என்று பேசியிருக்கின்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 விழுக்காடு வாக்குகளை பெற்றுத்தந்த காரைக்குடி தொகுதியில் சீமான் களம்காண்கிறார்
அதோடு, நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள வேளையில், 117 பெண்- 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)