கோலாலம்பூர், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மை பேணப்படுவதை உறுதி செய்ய, நாட்டில் ஏற்படும் முக்கிய உணர்ச்சிபூர்வ விவகாரங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.
விதிமுறைகளைப் பின்பற்றாத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிலாங்கூரில் பன்றிப் பண்ணை கட்டுவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து வினவப்பட்டபோது, அவ்விவகாரங்களை அனைத்து தரப்பினரும் முறையாகவும் மரியாதையுடனும் கையாள வேண்டும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
''எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் கூற விரும்புவது, நாம் அனைவரும் விதிகளை அறிவோம், அதாவது என்ன அனுமதிக்கப்படுகிறது, என்ன அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியும். ஆனால், நாம் அதை மரியாதையுடன் கையாள வேண்டும். அவமதிக்காதீர்கள். இஸ்லாம் கூட்டரசு மதம் ஆகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் நமது குடும்பங்களாக இருக்கும் நமது பிற சமூகங்களின் நடைமுறைகளை அவமதிக்கும் கருத்துக்கள் இருக்கக்கூடாது.'', என்று அன்வார் தெரிவித்தார்.
நேற்றிரவு, கோலாலம்பூரில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் சீனப் புத்தாண்டு கொண்டாடந்த்தில் கலந்துக் கொண்டபோது அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)