Ad Banner
 விளையாட்டு

2026 தோமஸ் கிண்ணம்: தொழில்முறை ஆட்டக்காரர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது பி.ஏ.எம்

12/02/2026 08:05 PM

கோலாலம்பூர், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- 2026 தோமஸ் கிண்ண பூப்பந்துப் போட்டிக்கான தேசிய அணியின் ஆட்டக்காரர்களை முடிவு செய்வதில் தொழில்முறை ஆட்டக்காரர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக மலேசிய பூப்பந்து சங்கம், பி.ஏ.எம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் பயிற்சி மையத்தில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு, சம்பந்தப்பட்ட விளையாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக பி.ஏ.எம் அடைவுநிலை செயற்குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ லீ சோங் வேய் தெரிவித்தார்.

அழைக்கப்பட்ட அந்த விளையாட்டாளர்களில் தேசிய ஆடவர் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் லீ ஸீ ஜியா, அய்டில் ஷோலே அலி சடிகின் மற்றும், ஆடவர் இரட்டையர் விளையாட்டாளர்களான கோ ஸீ ஃபெய்-நூர் இசுடின் ரும்சானி ஆகியோரும் அடங்குவர்.

''நாங்கள் ஸி ஜியா மற்றும் சோலே போன்ற விளையாட்டாளர்களையும் அழைக்கிறோம். நாங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அவர்களின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், லியோங் ஜுன் ஹோ போன்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு எங்களிடம் இருந்தால், இந்த தோமஸ் கிண்ணத்திற்கு தயாராகுவதற்கு சிறந்த நிலையில் உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்,'' என்றார் அவர்.

டென்மார்க்கின் வானிலைக்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்வது உட்பட, இறுதி தயார்நிலை நடவடிக்கையாக 10 நாள்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க, தேசிய அணி முன்கூட்டியே புறப்படும் என்று லீ சோங் வேய் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)