கோலா சிலாங்கூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக விவேகமான அணுகுமுறை மற்றும் சட்டத்தின் வழிகாட்டுதலுடன் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக ஏற்கனவே நடப்பில் உள்ள அமலாக்க நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும்.
விதிமுறைகளுக்கு இணங்காமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது ஊராட்சித் தரப்பினர் நடவடிக்கை எடுக்கலாம் என்ற பிரதமரின் அறிவிப்பு மாநில அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி துரிதப்படுத்தும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
முன்னதாக வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளை ஒருங்கிணைக்க, முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் செயற்குழு, RIBI-ஐ சிலாங்கூர் அமைத்திருந்ததாகவும், பின்னர் அது, ஐந்து மத வழிபாட்டுத் தலங்கள் செயற்குழு, LIMAS- ஆக விரிவுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"கடந்த 15 ஆண்டுகளாக, வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், அந்த வழிபாட்டுத் தலங்களை (விதிமுறைக்கு இணங்காதவை) இடித்து அல்லது அப்புறப்படுத்தியுள்ளோம். 10-க்கும் மேற்பட்ட தலங்கள் மீது நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என்று நினைக்கிறேன். 2015 முதல் எங்களிடம் பதிவு உள்ளது. நாங்கள், இந்த செயல்முறையை நெறிப்படுத்துவோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் குறிப்பிட்டது சட்டததைப் பின்பற்றுவதாகும். எனவே நாங்கள் சட்ட விதிமுறையைப் பின்பற்றுகிறோம்," என்றார் அவர்.
ஒவ்வொரு பிரச்சனையும் ஊராட்சித் தரப்பினர், நில அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் முழுமையாக ஆராயப்படும்.
அதோடு, எடுக்கப்படும் முடிவுகள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்யும் பொருட்டு நில உரிமை நிலை மற்றும் நில பயன்பாட்டு மண்டலங்களும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அமிருடின் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)