கோலாலம்பூர், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகளைப் பதிவேற்றியதாக, சந்தேகத்தின் பேரில், ''Cikgu Chandra'' என்ற முகநூல் கணக்கின் உரிமையாளரான நபர் ஒருவரை போலீசார் நேற்று பிற்பகல் மணி 3 அளவில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது, அப்பதிவைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கைத்தொலைப்பேசியையும் பறிமுதல் செய்ததாக கூறிய கோலாலம்பூர் போலீஸ் தலைவர், டத்தோ ஃபடில் மர்சுஸ், அச்சந்தேக நபர் எங்கு கைது செய்யப்பட்டார் என்பதை குறிப்பிடவில்லை.
அச்சந்தேக நபர், மேல் விசாரணைக்காக டாங் வாஙி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இன மற்றும் மதப் பிரச்சனைகளைத் தொட்டு, பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் அந்த சந்தேக நபரின் முகநூல் பதிவைப் பார்த்த நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு மணி 10-க்கு செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, 'Cikgu Chandra' கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம், செக்ஷன் 4(1), குற்றவியல் சட்டம், செக்ஷன் 505(c) மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்ஷன் 233-ரின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)