கோலாலம்பூர், பிப்ரவரி 08 (பெர்னாமா) -- நேற்றிரவு கோலாலம்பூர் SOGO பேரங்காடி முன்புறத்தில் நடைபெற்ற சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரானப் பேரணி தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்ததாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சுஸ் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 30 முதல் 64 வயதுடைய அவர்கள் அனைவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரு முக்கிய நபர்களில் பேரணி ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத்தும் ஓர் ஆர்வலரான தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோரும் அடங்குவதாக இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஃபடில் கூறினார்.
1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்ஷன் 505 உட்பிரிவு B குற்றவியல் சட்டம் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233இன் கீழ் விசாரணைக்கு உதவ அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
''எஞ்சியவர்கள் அனைவரும் நேற்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இருவரை நாங்கள் இன்னும் தடுத்து வைத்துள்ளோம். இன்று காலை அவர்களுக்கான தடுப்புக் காவலுக்கு விண்ணப்பம் செய்துள்ளோம். அசம்பாவிதமான முறையில் எதுவும் நிகழாமல் நீதியைக் காக்கும் வகையில் சிபிசி பிரிவு 505இன் கீழ் 19 பேரை நாங்கள் கைது செய்தோம்'', என்றார் டத்தோ ஃபடில் மர்சுஸ்.
அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோருவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்பேரணியில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
இருப்பினும் பாதுகாப்பு அம்சம் கருதி அக்கூட்டம் நடத்தப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று ஃபடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.
அதேவேளையில் பேரணி ஏற்பாடு தொடர்பாக நாடு முழுவதும் 131 போலீஸ் புகார்களையும் தங்கள் தரப்பு பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)