நிபோங் திபால், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- பெற்றோரிடமிருந்து நேர்மறையான ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அடுத்த ஆண்டு முதல் ஆறு வயது மாணவர்கள் முதலாம் வகுப்பில் இணைவதற்கான அதிகபட்ச தயார்நிலை பணிகளைக் கல்வியமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இதற்கான இணையம் வாயிலான பதிவு வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கவிருப்பதாகக் கூறிய கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், நகர்புறங்களில் இப்பதிவு எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றும் தங்கள் தரப்பு கணித்துள்ளதாகத் தெரிவித்தார்.
''அதனால்தான் அதிகபட்ச தயார்நிலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்று நாடாளுமன்றத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். விரைவில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தற்போது நாங்கள் பள்ளிப் பகுதிகளை வரைபடமாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார் அவர்.
2027-ஆம் ஆண்டில் ஆறு வயது மாணவர்கள் முதலாம் ஆண்டில் பயில்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்துரைக்கையில் ஃபட்லினா சிடேக் அவ்வாறு கூறினார்.
மேலும், பகுதிகள் மற்றும் பள்ளிகளை வரைபடமாக்குவதில் அமைச்சு தற்போது முக்கிய கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதில் குறிப்பாக வசதிகளை அடையாளம் காண்பது, வகுப்பு திறனை மேம்படுத்துவது மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைப் பெறுவது உள்ளிட்ட வளர்ச்சிகள் ஆகியவை அடங்கும் என்று ஃபட்லினா தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]