ஶ்ரீ கெம்பாங்கான், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் இந்திய புலம்பெயர்ந்தோர் முக்கிய பாலமாகத் திகழ்வதாக மலேசியாவிற்கான தமது பயணத்தின் முதல் நாளில் ஆற்றிய உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
அதுமட்டுமின்றி, இந்தியா, உலகிற்கு அளித்த பரிசு, தமிழ்மொழி என்று வர்ணித்த அவர் தமிழ் இலக்கியமும் தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்றும் புகழாரம் சூட்டினார்.
'''தமிழ்' இந்தியா உலகிற்கு அளித்த பரிசு. தமிழ் இலக்கியம் நிலையானது; தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. அதேவேளையில், தமிழ் மக்கள் மனிதநேயமும் திறமைகளும் கொண்டவர்கள்,'' என்றார் அவர்.
அதேவேளையில், மலேசியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் குறித்தும் பெருமிதம் கொண்டதோடு, கடந்த வாரம் மலேசியாவில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருநாள் தொடர்பிலும் மோடி பேசினார்.
''எப்படி மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்திய மொழியில் பிள்ளைகளுக்கு கற்பிக்கிறார்கள் என்று வியந்தேன். தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் மற்றும் சுவாமி விவேகானந்தாவை இங்கேயும் உணர முடிகிறது. கடந்த வாரம் பத்துமலையில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருநாளின் தெய்வீகம், தமிழ்நாடு, பழனியைப் போன்று இருந்தது,'' என்றார் அவர்.
இந்திய - மலேசிய உறவில், மக்களுடன் மக்கள் எனும் பிணைப்பு அடித்தளமாக உள்ளது என்று, நேற்று, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான், தி மைன்ஸ் அனைத்துலக கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், எம்.ஐ.ஈ.சி.சி-இல், மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஏற்பாடு செய்த ‘Selamat Datang Modi Ji’ எனும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறினார்.
நேற்று தொடங்கி மலேசியாவிற்கு இரு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ள மோடி, மலேசியத் தலைவர்கள் மற்றும் மக்களால் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் சிலர் தங்களின் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
''மோடி ஜியின் ஆலோசனை பேரில் நம் பிரதமர் இங்குள்ள தமிழர்களுக்கு கல்வியிலும் வேலையிலும் இன்னும் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும். இப்போது வாய்ப்புகள் வழங்கப்படுகிறதுதான். அது இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,'' என்று சாந்தி கணபதி தெரிவித்தார்.
''பொதுவாகவே இளைஞர்கள் இதுபோன்ற அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மிகக் குறைவு. ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் வழி மலேசியாவுடன் மற்ற நாடுகள் கொண்டுள்ள இருதரப்பு உறவு குறித்து ஆழமாக தெரிந்துகொள்ள முடிகிறது,'' என்றார் வினோஷா லதா வேலு.
''இது இன்னும் வலுவாகும். ஏனெனில், கல்வி, பொருளாதாரம் போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பு நல்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்று நாகராஜன் லோகநாதன் குறிப்பிட்டார்.
பல்வேறு இன மற்றும் கலாச்சார பின்னணியைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இரு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]