Ad Banner
 பொது

தேசிய கல்வித் திட்டத்திற்கு இணங்க மூன்று முதல் நான்கு வயதிலான குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும்

25/01/2026 06:28 PM

பாகான் டத்தோ, 25 ஜனவரி (பெர்னாமா) -- ஆர்.பி.என் எனப்படும் 2026-2035 ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய கல்வித் திட்டத்திற்கு இணங்க, சமூக மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம், தபிக்கா (Tabika) மற்றும் மழலையர் பள்ளி, தடிக்காவைச் (Tadika) சேர்ந்த மூன்று முதல் நான்கு வயதிலான குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும்.    
 
கல்வி அமைச்சின் கீழ், ஐந்து வயதுக் குழந்தைகளுக்கான பாலர் வகுப்புகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஒருமைப்பாடு மழலையர் பள்ளி, Kemas மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஆகியவற்றின் பாடத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

''கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாலர் பள்ளிகளைக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஐந்து வயதுக் குழந்தைகள், தேசிய பள்ளிகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளில் பாலர் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும்,'' என்று அவர் தெரிவித்தார்.

இன்று, பேராக் பாகான் டத்தோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மழலையர் கல்வியை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இணங்க, தற்போதைய தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன், செயல்பாட்டில் உள்ள வகுப்புகளை Kemas தொடரும் என்று புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார். 

அடுத்தாண்டு தொடங்கி ஆறு வயது மாணவர்கள் முதலாம் ஆண்டில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என்று,  2026-2035 ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய கல்வித் திட்டத்தின் அறிவிப்பில் பிரதமர் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)