Ad Banner
 சிறப்புச் செய்தி

புதிய தொழில்நுட்பத்தில் காவடிகளைத் தயாரித்து கவனம் ஈர்த்து வரும் சத்திஷ்ராஜ்

26/01/2026 08:08 PM

காஜாங், ஜனவரி 26 (பெர்னாமா) -- அகங்காரத்தைத் துறந்து இறைவனை அடைய பளுவைச் சுமந்து முருகனிடம் நேர்த்தி கடனைச் சமர்ப்பிக்க பக்தர்கள் காவடி எடுப்பது தொன்று தொட்ட நம்பிக்கையாகும்.

இவ்வாறு பக்தியின் அடிப்படையில் மட்டுமின்றி தைப்பூசத்திற்கு வருபவர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்க்கும் எழில் நிறைந்த காவடிகளை அதன் தன்மையும் வனப்பும் மாறாது புத்தாக்க முறையில் உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் சிலாங்கூர், காஜாங்கைச் சேர்ந்த சத்திஷ்ராஜ் சிவராஜா. 

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் காவடி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தமது தந்தை சிவராஜா கலியப்பெருமாளிடமே இக்கலை குறித்து முழுமையாகக் கற்றுக் கொண்டதாகக் கூறிய 27 வயதுடைய சத்திஷ்ராஜ் தமது காவடி தயாரிப்பு முறை குறித்து விவரித்தார்

''முதலில், கவடியின் அடிப்படை வடிவத்தை உறுதி செய்த பின்னரே அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இம்முறை புதிய முயற்சியாக வேல் வடிவிலான கவடியை உருவாக்கி வருகிறோம். இதற்காக முதலில் அதன் அடிப்படையான பலகையை வேல் வடிவத்தில் செதுக்கித் தயார் செய்வோம். அதனைத் தொடர்ந்து, கவடியின் முக்கிய அடையாளமான மயில் தோகைகளைத் தயார் செய்து அவற்றை ஒன்றோடு ஒன்று பின்னி நேர்த்தியாக அடுக்கி வைப்போம். இறுதியாக, பல்வேறு அலங்காரப் பொருட்கள் மற்றும் கவடிக்கெனத் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கவடி மணிகள் கொண்டு முன் பகுதியை அலங்கரிப்பதன் மூலம் ஒரு முழுமையான கவடி தயாராகும்.'' என்றார் சத்திஷ்ராஜ் சிவராஜா.

ஒரு காவடியைத் தயாரிப்பதற்கு சுமார் ஆறாயிரம் ரிங்கிட் வரை செலவு ஏற்படும் என்றாலும், காவடி தயாரிப்பதற்கான வரன்முறையை மீறி தாம் ஒருபோதும் காவடி தயாரித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

''சிலர் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்பக் காவடிகளைக் கேட்டாலும் பாரம்பரியம் மாறாமல் முருகனின் சிறப்புகளைப் பறைசாற்றும் காவடிகளையே நாங்கள் உருவாக்குகிறோம். கடந்த 27 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டுள்ள நான் விரதமிருந்து மனத்தூய்மையுடனும் உடல் சுத்தத்துடனும் காவடிகளைத் தயாரித்து வருகிறேன்'' என்றார் சத்திஷ்ராஜ் சிவராஜா.

விதவிதமான காவடிகளைச் சுமப்பது இந்துக்களின் தொன்று தொட்ட மரபாக இருந்தாலும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதிலும் சில மாற்றங்களைப் பக்தர்கள் எதிர்ப்பார்ப்பதாகக் சத்திஷ்ராஜ் தெரிவித்தார்.

''இம்முறை நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தும் வகையில், வழக்கமான மின்விளக்குகளுக்கு மாற்றாக, மக்கள் எளிதில் கையாளக்கூடிய மின்கல வசதிகளைக் காவடியில் இணைத்துள்ளோம். குறிப்பாக இக்காவடிக்கு வெள்ளை நிற மின்விளக்குகளைப் பயன்படுத்தியுள்ளோம்'' என்றார் சத்திஷ்ராஜ் சிவராஜா.

மேலும், எவ்வளவு பெரிய காவடியாக இருந்தாலும் அதன் எடையைக் குறைக்கும் உத்தியைப் பயன்படுத்துவதால் ஆண் பெண் இருபாலாரும் தம்மிடம் அதிகமாகக் காவடிகளை வாடகைக்கு எடுப்பதாகவும் சத்திஷ்ராஜ் கூறினார்.

இதனிடையே தமது காலத்தில் தயாரிக்கப்பட்ட காவடிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சத்திஷ்ராஜின் தந்தை சிவராஜா கலியப்பெருமாள்.

''முன்பெல்லாம் காவடிகள் உருமி மேளங்கள் இன்றி மிகவும் எளிமையாகக் காணப்படும். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. நம்முடைய பழமையான கலாச்சாரம் இக்காலத்திற்கு ஏற்ப அதிநவீன முறையில் கையாளப்படுகிறது'', என்றார் சிவராஜா கலியப்பெருமாள்.

மேலும், கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இந்திய இளைஞர்கள் பலர் காவடி தயாரிப்பதில் ஆர்வத்தோடு களமிறங்கி இருந்தாலும் இது போட்டித் தன்மையற்ற ஆரோக்கியமான துறையாகவே இதுவரை நீடித்து வருவதாகச் சிவராஜா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)