பைலின், டிசம்பர் 27 (பெர்னாமா) -- மீண்டும் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தாய்லாந்தும் கம்போடியாவும் சனிக்கிழமை நண்பகல் தொடங்கி உடனடி சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
டிசம்பர் 7ஆம் தேதி முதல் அவ்விரு நாடுகளும் மீண்டும் சண்டையிட்டு வரும் நிலையில் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கின்றன.
சிறப்பு பொது எல்லை செயற்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் இன்று கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
''இரு தரப்பினரும் இன்று 2025ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் ஒப்புக் கொள்ளப்பட்ட உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு அது 72 மணி நேரத்திற்குள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அந்நேரத்தில் கடந்த 151 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்களைத் தாய்லாந்து விடுவிக்க அனுமதிக்கும்'', என்றார் தீ செய்ஹ.
அனைத்து வகையான ஆயுதங்கள், பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் இரு தரப்பினரின் இராணுவத் தாக்குதல்களை உள்ளடக்கி உடனடி போர்நிறுத்தத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
அனைத்துலக விதிமுறை மற்றும் நடைமுறையின்படி போர் நிறுத்தப்பட்டதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் நிலைமை சீரானவுடன் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும்'', என்றார் சுரசாந்த் கோங்சிரி.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)