கோலாலம்பூர், 14 பிப்ரவரி (பெர்னாமா) -- பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக டான் ஶ்ரீ நோ ஒமார் அறிவித்திருக்கும் வேளையில், அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,
அதனை பொருட்படுத்தாமல், கட்சியின் கட்டொழுங்குமுறை வாரியம் சில உறுப்பினர்களை நீக்கியிருப்பதால், தாம் பதவி விலகுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உச்சமன்றக் கூட்டத்தின் முடிவுக்கு முரணான அறிக்கைகளை வெளியிடும் உறுப்பினர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் உச்சமன்றம் முடிவு செய்ததை, முகநூலில் பகிரப்பட்ட காணொளி மூலம் நோ ஒமார் சுட்டிக்காட்டினார்.
''கேள்வி என்னவென்றால், ஒழுங்குமுறை வாரியம் பெர்சத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது? ஒழுங்குமுறை வாரியம் உச்சமன்ற முடிவுகளை மதிக்கவில்லையா? எது அதிக சக்தி வாய்ந்தது, ஒழுங்குமுறை வாரியமா அல்லது பெர்சத்துவின் உச்சமன்றமா? எனவே, உச்சமன்றத்தின் முடிவை ஒழுங்குமுறை வாரியம் மதிக்காவிட்டால், கட்சியின் மிக உயர்ந்த அமைப்பான உச்சமன்றம், கூட்டம் நடத்தி என்ன பயன்?'' என்றார் அவர்.
துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் உட்பட 17 கட்சி உறுப்பினர்களை நேற்று வரை பதவி நீக்கம் செய்த பெர்சத்து ஒழுங்குமுறை வாரியத்தின் நடவடிக்கைக்கும் நோவின் பதவி விலகல் முடிவுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)