பட்டர்வெர்த், 23 டிசம்பர் (பெர்னாமா) -- பண்டிகைகள் என்றாலே வண்ண விளக்குகளினாலான அலங்கரிப்பு அதன் கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது.
அவ்வகையில், இன்னும் சில நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 25,000 ரிங்கிட் செலவில் தங்கள் வீட்டையும் வீட்டின் வளாகத்தையும் வண்ண விளக்குகளினால் அலங்கரித்துள்ளனர் பினாங்கு, பட்டர்வெர்த்தை சேர்ந்த டி. சார்ல்ஸ் மற்றும் எஸ். கிறிஸ்டி தம்பதியர்.
சுற்றுவட்டார மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இந்த அலங்கரிப்பு, பல்லின மக்களின் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வைப் பகிர்ந்து கொள்வதற்கான அடையாளமாக மாறியுள்ளது.
‘Snowman’, Santa Claus எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா உட்பட செயற்கை பனித்தூறல் என பல்வேறு அலங்காரங்களால் சூழ்ந்துள்ள அவர்களின் வீடு, உற்சாகம் நிறைந்த எழில்மிகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.
தெலுக் ஆயர் தவார், தாமான் தெலுக் மோலெக்கில் அமைந்துள்ள அவ்வீட்டிற்கு வருகை புரியும் அனைத்து மக்களையும் இன்முகத்துடன் வரவேற்று நட்புணர்வுடன் காண்பிக்க அனுமதிப்பதே, இந்த அலங்கரிப்பின் சிறப்பு அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
எந்தவொரு வெளித் தரப்பினரின் தலையீடும் இல்லாமல் கணவன், மனைவி, மகன் என மூவர் மட்டுமே இந்த மொத்த அலங்காரத்தையும் செய்ததாகக் கூறிய 53 வயதுடைய சார்ல்ஸ், செயற்கை பனித்தூறல் மக்களை அதிகம் ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.
''பனித்தூறலுக்கான இயந்திரம் உள்ளது. அதற்கான திரவத்தை அதில் ஊற்றியப் பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்கு செயற்கை பனித்தூறல் பொழியும். நாள் ஒன்றுக்கு இருமுறை அதனைச் செய்வோம். இதோடு கிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் நாங்கள் அதனைச் செய்வோம்,'' என்றார் சார்ல்ஸ்.
கடந்தாண்டு 15,000 ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அலங்கரிப்பு இவ்வாண்டு கூடுதல் 10,000 ரிங்கிட்டாக உயர்ந்ததாக சார்ல்சின் மனைவி 48 வயதுடைய கிறிஸ்டி கூறினார்.
''எங்களின் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதற்காகவே நாங்கள் இதனை முழுமனதோடு செய்கிறோம்,'' என்றார் கிறிஸ்டி.
நவம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கிய இந்த அலங்கரிப்புப் பணிகள் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் நிறைவடைந்ததாக தெரிவித்த அவர்கள், ஜப்பான், ஹாங் காங், ரஷ்யா உட்பட மேற்கத்தியர்களும் தங்கள் வீட்டிற்கு வருகையளிப்பதாகக் குறிப்பிட்டனர்.
ஒவ்வொரு நாளும் மாலை மணி 6.30 தொடங்கி நள்ளிரவு மணி 12.30 வரை திறக்கப்பட்டிருக்கும் அவர்களின் இல்லம், ஜனவரி இரண்டாம் தேதி வரை பொது மக்களுக்காக இந்த அலங்கரிப்பு வைக்கப்பட்டிருக்கும் என்ற கூடுதல் தகவலையும் வழங்கினர்.
தனிச் சிறப்புமிக்க இந்த கிறிஸ்துமஸ் அலங்காரத்தைக் காண இதுவரை சுமார் 10,000 பேர் அங்கு வருகை புரிந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]