கோலாலம்பூர், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- ஓர் இனத்தின் பண்பாட்டையும் அடையாளத்தையும் தொடர்ந்து உயிர்ப்பிக்கச் செய்யும் முதன்மை கருவியாக தாய்மொழி திகழ்கிறது.
இந்நிலையில், மலேசியாவில் வாழும் பல்லின மக்கள் தத்தம் தாய்மொழியைப் புரிந்துகொண்டு அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் அனைத்துலகத் தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாண்டு, இக்கொண்டாட்டத்தை பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த தங்கள் தரப்பு கல்வி அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக மலேசிய தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் சுப்ரமணியம் ராமசாமி கூறினார்.
''கல்வி அமைச்சு இதனை பள்ளிகளில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஏனெனில், அங்கு பல்லின மாணவர்கள் உள்ளனர். இதன்வழி, ஒருவர் மற்றொருவரின் மொழியைப் பற்றி தெரிந்து, புரிந்துகொள்ளும் போது அது மதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, அவர்கள் மத்தியில் ஒற்றுமையும் நிலவும்,'' என்றார் அவர்.
கடந்த 2004-ஆம் தொடங்கி, பிற இந்திய இயக்கங்கள் அளித்த ஒத்துழைப்பின் அடிப்படையில் அனைத்துலகத் தாய்மொழி தினத்தைக் கொண்டாடி வந்த வேளையில், 2012-ஆம் ஆண்டிலிருந்து இதர மொழி இயக்கங்களையும் இணைத்துக் கொண்டதாக சுப்ரமணியம் தெரிவித்தார்.
இவ்வாண்டு 15-வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாய்மொழி தினக் கொண்டாட்டத்திற்கு, லிம் லியான் கியொக், LLG கலாச்சார மேம்பாட்டு மையம் தலைமையேற்றுள்ளதோடு, மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய இக்ராம் அமைப்பு உட்பட பல அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் இதில் இணைந்துள்ளன.
''மற்ற இயக்கங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவுள்ளோம். மொழியைக் கற்றுக்கொள்ளல் மட்டும் போதாது. மொழியை நாம் பயன்படுத்தினால்தான் எதிர்காலத்திலும் அது தொடர்ந்து வாழும்,'' என்றார் அவர்.
இதனிடையே, ''தாய்மொழி: நம் அனைவரின் பொது மரபும் அடையாளமும்'' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டிற்கான உலகத் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படவுள்ளதாக, இம்முறை இந்நிகழ்ச்சியின் செயற்குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள LLG-ஐ பிரதிநிதிக்கும் சியா குவோங் லியாங் கூறினார்.
''இவ்வாண்டு தாய்மொழி தினத்தின் கருப்பொருள், தாய்மொழி: நம் அனைவரின் பொது மரபும் அடையாளமும் என்பதாகும். அனைத்துலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும், சீனப் புத்தாண்டின் ஐந்தாவது நாள் என்பதால், அதன் தொடக்க விழாவை ஒரு வாரம் கழித்து அதாவது பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூர், LLG கலாச்சார மேம்பாட்டு மைய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலகத் தாய்மொழி தினம், இவ்வாண்டு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன சமூக மண்டபம், KLSCAH-இல் காலை மணி 9-க்கு தொடக்கம் காண்பதாக குவோங் லியாங் விவரித்தார்.
தொடர்புக்கு: 011 6350 6533 - மலேசிய தமிழ் அறவாரியம்
இக்கொண்டாட்டத்தின்போது, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற பல போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
அது குறித்த விவரங்களுக்கு 011 6350 6533 என்ற எண்ணில் மலேசிய தமிழ் அறவாரியத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மே ஒன்பதாம் தேதி பரிசளிப்பு அங்கத்தோடு இவ்விழா நிறைவடையும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]