நுவரா-எலியா, டிசம்பர் 02 (பெர்னாமா) -- கடந்த வாரம் இலங்கையைத் தாக்கிய டித்வா புயலில் பாதிக்கப்பட்ட ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உதவிகளை வழங்குவது உட்பட சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை அந்நாட்டின் மீட்பு பணியாளர்கள் நேற்று மேற்கொண்டனர்.
இறப்பின் எண்ணிக்கை இதுவரை 355ஆக உயர்ந்துள்ள வேளையில் 366 பேர் காணாமல் போயிருப்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையைத் தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை அந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் விளைவாக மலைப்பாங்கான மத்தியப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இம்முறை ஏற்பட்ட பேரழிவினால் இலங்கையில் 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டை மீண்டும் மீட்சியடையச் செய்வதற்கான தேவை இருப்பதாக அத்தியாவசிய சேவைக்கான தலைமை இயக்குநர் பிரபாத் சந்திரகீர்த்தி கூறினார்.
மேலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மற்றும் விமான சேவை மீண்டும் செயல்பட தொடங்கியிருப்பதாகவும் பள்ளிகள் இன்னும் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இயற்கை பேரிடரில் முழு நாடும் பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் இலங்கை வரலாற்றில் இது மிகப் பெரிய சவாலானது என்றும் முன்னதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)