Ad Banner
 பொது

ஈப்போ புனித லூர்து மாதா தேவாலயத்தில் ஒற்றுமைப் பொங்கல்

19/01/2026 06:52 PM

ஈப்போ, ஜனவரி 19 (பெர்னாமா) -- இயற்கையின் கொடைகளை மதிப்பது, உழைப்பின் அருமையை உணர்வது, உறவுகளையும் சமூக ஒற்றுமையையும் போற்றுவது உள்ளிட்ட பண்புகளுக்கு பொங்கல் திருநாள் அச்சாணியாக் விளங்குகிறது.

மலேசியாவைப் பொருத்தமட்டில் மதம் கடந்து, தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவே இத்திருநாள் வரவேற்கப்படுகிறது.

அதில், பேராக், ஈப்போ, ஜாலான் சிலிபினில் வீற்றிருக்கும் பழைமை வாய்ந்த புனித லூர்து மாதா தேவாலயத்தில் பல மதத்தவர்கள் ஒன்றுகூடி 119-ஆம் ஆண்டாக பொங்கல் திருநாளை நேற்று கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தேவாலயத்தின் கலாச்சார குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இப்பொங்கல் விழாவை பங்குத் தந்தை மறைத்திரு ரோபட் டேனியல் தலைமையேற்று தொடக்கி வைத்தார்.

மேலும், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களும் இந்திய முஸ்லிம்களும் இதில் கலந்து கொண்டு ஒற்றுமைப் பொங்கலாக விழாவை மெருகேற்றி இருந்ததாக தேவாலயத்தின் தமிழ்க் கலாச்சார குழு தலைவர் கிறிஸ்டோபர் அருள்சாமி தெரிவித்தார்.

"ஆண்டுதோறும் பல்லினத்தவர்களை அழைத்து தேவாலயத்தில் ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டப்பட்டு வருகிறது. மதங்களைக் கடந்து தமிழன் என்ற அடிப்படையில் கொண்டாட்டப்படும் இவ்விழாவிற்கு ஆண்டுதோறும் நிறைவான ஆதரவு கிடைத்து வருகிறது," என்று அவர் கூறினார்.

இவ்விழாவில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கல்லாச்சார ஆடை அலங்காரம், கோலப் போட்டி, உரி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல போட்டி விளையாட்டுகளும் பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)