கொழும்பு, டிசம்பர் 04 (பெர்னாமா) -- இலங்கையில் டிட்வா புயலின் தாக்கத்தால் வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு சம்பவங்களில் இதுவரை குறைந்தது 474 பேர் உயிரிழந்தனர்.
பல லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்துலக உதவி குழு இலங்கை வந்து சேர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசு, இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தடைந்த, இராணுவ விமானங்கள் தலைநகர் கொழும்புவுக்கு அருகில் உள்ள Bandaranaike அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கின.
மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
உணவுப் பொருட்கள், துணிமணிகள், மருந்துகள் என இன்னும் அத்தியாவசிய பொருட்களும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனிடையே, மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)