Ad Banner
Ad Banner
 உலகம்

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்

20/12/2025 07:22 PM

நாவலப்பிட்டி, டிசம்பர் 20 (பெர்னாமா) -- இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையான விளைவுகளைச் சந்தித்துள்ளது.

பல குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்திருப்பதால் நாவலப்பிட்டியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கப் பள்ளிகள் மற்றும் கோவில்களில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்த்துள்ளனர்.

டித்வா புயலினால் பெய்த கனமழையைத் தொடர்ந்து நாவலப்பிட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பல வீடுகள் மண்ணில் புதையுண்டனர்.

சுமார் 150 ஆண்டுகள் பழமையான வீடுகள் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தனர்.

''முதலில் என் மனைவி உயிரிழந்தார். அதன் பின்னர் மருமகன், மாமியார், மகள் மற்றும் இரு பேரன்களும் உயிரிழந்தனர். எனக்கு வசிப்பிடத்திலும் பணியிடத்திலும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. தற்போது வீடே இல்லாத நிலையில் உள்ளோம். அனைத்தையும் இழந்த மிகுந்த துன்ப நிலையில் இருக்கிறோம்'' என்றார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் ஏழுமுகம் குமரன்.

''இதுவே எங்களின் குடியிருப்பு. எங்களின் வீடுகளும் இங்கேதான் உள்ளன. ஆனால் பெரிய கற்கள் மலைபோல் குவிந்து இருப்பதால் இந்தப் பகுதியில் வசிப்பது எங்களுக்குப் பாதுகாப்பாகவும் ஏற்றதாகவும் இல்லை'' தேயிலைத் தோட்டத் தொழிலாளர் என்றார் காமணி கருப்பையா. 

மேலும், ''மழை பெய்தால் நாங்கள் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் வெயில் வந்துவிட்டால் உடனே வீட்டுக்குச் செல்லச் சொல்லிவிடுவார்கள் மீண்டும் வேலைக்குக் வரவும் கூறுவார்கள். இன்று கூட மகன் மற்றும் மகளுடன் நடந்து வேலைக்குச் சென்று இப்போதுதான் திரும்பி வந்தேன். எனவே, எங்கள் பாதுகாப்பிற்க்கு ஒரு வீடு அவசியமாகிறது'' என்றார் மற்றொரு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தர்ஷனி தேவி செல்லமுத்து  

தொடந்து, ''இன்றைய சூழலில் பிள்ளைகளுடன் வாழ்வது என்பது நாளை என்ன நிகழும் என்பதைக் கணிக்க முடியாத நிலையிலுள்ளது. நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரிடமும் உதவி கோரி நிற்கிறோம். எங்கள் சமுதாயத்தைப் பாதுகாத்துக்கொள்ளவோ அல்லது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்கிக்கொடுக்கவோ யாரேனும் உதவ முன்வந்தால் அது மிகுந்த உதவியாக இருக்கும்'' என்றார்  தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பத்மநாதன் செல்லையா.

இலங்கையில் உள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மலையக தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து  அழைத்து வரப்பட்டப்பட்டனர்.

பல தலைமுறைகளாக இலங்கையிலேயே தங்கிவிட்ட நிலையில் தற்போது சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமனோர் வசித்து வருகின்றனர்.

உலகின் மிகச்சிறந்த தேயிலையை இலங்கை பயிரிடுவதால் இதன் வழி அந்நாட்டிற்குக் கோடிக்கணக்கான டாலர்கள் வருமானம் கிடைக்கிறது.

ஆனால் மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்ச ஊதியமான 1,200 இலங்கை ரூபாய் அல்லது மலேசிய மதிப்பில் 15 ரிங்கிட் 80 சென்னுக்கும் குறைவாகவே ஊதியமாகப் பெறுகிறார்கள்.

இவர்களுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் வசிப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் முறையாகக் கிடைப்பது இல்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)