கம்பஹா, நவம்பர் 30 (பெர்னாமா) -- இலங்கையைத் தாக்கியிருக்கும் Ditwah புயலில் பலியானவர்களின் எண்ணிக்கை 153ஆக உயந்துள்ள வேளையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தில் மேலும் 191 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை, மோசமான வானிலை தொடர்பான பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்டுள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் அந்நாட்டில் அவசரகால நிலையை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
இலங்கையில் இப்புயலினால் நாடு முழுவதிலும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ அமலாக்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதுவரை 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிட்டத்தட்ட 800 நிவாரண மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பேரிடர் நிர்வகிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் பள்ளிகளையும் அலுவலகங்களையும் மூடி தேர்வுகளை ஒத்திவைத்தது.
அந்நாட்டின் பல பகுதிகளில் சாலைகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்ததை அடுத்து அதிகாரிகள் பயணிகள் ரயில் சேவைகளை நிறுத்தி சாலைகளை மூடினர்.
இதனிடையே, நேற்று இந்தோனேசியாவில் நிகழ்ந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண மீட்பு பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் இதுவரை 279 பேர் பலியான வேளையில், அதன் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
வடக்கு சுமத்ரா மாகாணத்தின் சில பகுதிகளில் சாலைகள் சேதமடைந்ததுடன், தகவல் தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
மேலும், விமானங்களின் மூலம் உதவிப் பொருள்கள் அனுப்பப்படும் அதேவேளையில், கனரக உபகரணங்கள் இல்லாததால் மீட்பு பணிகளும் தடைப்பட்டன.
வடக்கு சுமத்ராவில், இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)