ஜாலான் பார்லிமன், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு 23 அரசாங்க தலைவர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள் தங்கவிருக்கும் 20-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ தங்கும் விடுதிகள் உட்பட பல முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்.
பேராளர்களின் பயணங்கள் சீராகவும் திட்டமிட்டபடியும் நடைபெறுவதை உறுதி செய்ய KLCC உட்பட சுபாங் விமானத் தளம் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் வழித்தடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்தெரிவித்தார்.
"நாங்கள் நிறைய வெள்ளோட்ட நடவடிக்கைகளைச் செய்துள்ளோம். குறிப்பாக, நடைமுறை வழித்தடங்களை உள்ளடக்கியது. சுபாங்கில் இருந்து பிரமுகர்கள் வருகிறார்கள். கே.எல்.ஐ.ஏ-விலும் பிரமுகர்கள் இறங்குகிறார்கள். எனவே, அனைத்து நெறிமுறை வழித்தடங்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். கட்டம் கட்டமாகச் சாலைகள் மூடுவதாகவும் அறிவித்துள்ளோம்," என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சர் Anthony Loke உடனான செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
எனவே, 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சம்பந்தப்பட்ட இடத்தில் எந்தவொரு கூட்டங்களையும் ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)