Ad Banner
 பொது

தைப்பூசம் ; பத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள்

29/01/2026 06:36 PM

பத்துமலை, ஜனவரி 29 (பெர்னாமா) -- ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இதில் சிலாங்கூர், புக்கிட் அமான் மற்றும் இதர போலீஸ் தலைமையகங்களைச் சேர்ந்த 166 மூத்த அதிகாரிகளும் அடங்குவர் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷசேலி கஹார் தெரிவித்தார்.

"சிலாங்கூர் போலீஸ் படை, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நிர்வாகத்தின் கீழ், பல சாலைகளை ஜனவர் 30ஆம் தேதி நள்ளிரவு மணி 12.01 தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி நள்ளிரவு மணி 12.01 வரை மூடவுள்ளது. அண்மைய சூழ்நிலைக்கு ஏற்ப ஏழு முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும், " என்றார் அவர்.

இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற Ops Palu செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தைப்பூசத்தின்போது நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதோடு, மூடப்படும் சாலைகள் குறித்த விவரங்களையும், போக்குவரத்து நிலவரங்களையும் கோம்பாக் மாவட்ட போலீசின் அதிகாரப்பூர்வ முகநூல் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

இதனிடையே, பத்துமலை, சுப்ரமணிய ஆலயப் பகுதிகளில் dron எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டிற்கும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஷசேலி கூறினார்.

"ஆளில்லா விமானங்களை பறக்கவிட திட்டமிட்டிருக்கும் எந்தவொரு தரப்பினரும் மலேசிய பொது விமானப் போக்குவரத்து அமலாக்கத் தரப்பிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், " என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)