வாஷிங்டன் டி.சி, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தைத் தொடர்ந்து, லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஒரு செய்தியாளர் உட்பட குறைந்தது ஐவரைக் கொன்ற இஸ்ரேலியத் தாக்குதலின் ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கான இஸ்ரேலியத் தூதர் யெச்சியல் லெய்டர் மற்றும் அமெரிக்காவுக்கான லெபனான் தூதர் நடா ஹமடெ மோவாட் ஆகியோரை ஒவல் அலுவலகத்தில் டிரம்ப் வரவேற்றார்.
வருங்காலத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக டிரம்ப் மேலும் கூறினார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் உள்ள இரு நாடுகளின் தூதர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகவிருந்த இந்தப் போர் நிறுத்தம் வன்முறையைக் கணிசமாக குறைந்துள்ளது.
எனினும், இஸ்ரேலியப் படைகள் சுயமாக அறிவித்த ஒரு இடைநிலை மண்டலத்தை கைப்பற்றியுள்ள வேளையில், லெபனானில் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இதனிடையே, ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தப்போவதில்லை என்று டோனல்ட் டிரம்ப் நேற்று, வியாழக்கிழமை தெரிவித்தார்.
''இல்லை. இல்லை, நான் பயன்படுத்த மாட்டேன். அது எங்களுக்குத் தேவையில்லை. எனக்கு அது ஏன் தேவை? அப்படி ஒரு முட்டாள்தனமான கேள்வியை ஏன் கேட்க வேண்டும்? நான் ஏன் பயன்படுத்த வேண்டும்? அணு ஆயுதம் இல்லாமலேயே, மிகவும் வழக்கமான முறையில் நாம் அவர்களை முற்றிலுமாக அழித்துவிட்ட நிலையில், நான் ஏன் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்? இல்லை, நான் அதைப் பயன்படுத்த மாட்டேன். அணு ஆயுதத்தை யாரும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது'', என்றார் அவர்.
அத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்துவாரா என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது டிரம்ப் அவ்வாறு பதிலளித்தார்.
ஈரானுடன் ஒரு நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்காக எவ்வளவு காலம் காத்திருக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, இவ்விவகாரத்தில் தம்மை அவசரப்படுத்த வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)