புத்ராஜெயா, 12 பிப்ரவரி (பெர்னாமா) -- விதிமுறைகளைப் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது மற்றும் அண்மையில், ராவாங்கில் கோயில் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாளை அமைச்சரவையில் விரிவான விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரங்களில், அரசாங்கம் பதற்றங்களைத் தணிப்பதற்கான சிறந்த தீர்வைக் கண்டறிய, அப்பிரச்சனைகளின் உண்மை நிலவரம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்து எடுத்துரைக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
''அதுபோன்ற வழிபாட்டுத் தலங்கள் தற்போது புதிதாக உருவாகி வருகின்றன. உண்மை என்னவென்றால் இது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. ஆனால், இப்பிரச்சனையைத் திரித்துக்கூறத் தேர்ந்தெடுக்கும் சில தரப்புகள் இருக்கின்றனர். மிகவும் உணர்ச்சிபூர்வமான பிரச்சனையில் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். அவர்கள், ஒரு தீர்வைக் கண்டுப்பிடிப்பதாகத் தெரியவில்லை.'' என்றார் அவர்.
இன்று, வியாழக்கிழமை, புத்ராஜெயாவில், உள்துறை அமைச்சின் மாதந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் சைஃபுடின் நசுத்தியோன் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய தேசிய போலீஸ் படைத் தலைவருக்கும் சிறப்புப் பிரிவின் இயக்குநருக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் விவரித்தார்.
இவ்விவகாரத்தில், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மைகள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் விரும்புவதாகவும், உணர்ச்சிகளால் அல்லது சில தரப்பினரின் திரித்துக் கூறும் செயலால் செயல்படக்கூடாது என்றும் சைஃபுடின் நசுத்தியோன் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)