கோலாலம்பூர், ஜனவரி 30 (பெர்னாமா) -- சுமார் ஈராண்டுகளுக்கு முன்னர் டி.கே.ஏ.டி எனப்படும் இராணுவப் படையின் சமூகநல நிதியில் ஏறக்குறைய 50 லட்சம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக மலேசிய இராணுவப் படை மூத்த அதிகாரி மேஜர் ஜெனரல் டத்தோ முஹமட் ஃபௌசி காமிஸ் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 56 வயதான முஹமட் ஃபாஸி மறுத்து விசாரணைக் கோரினார்.
Precious Amber International நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்வதற்காக அந்நிதியை டி.கே.ஏ.டி முதலீட்டுச் செயற்குழுவின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக உறுப்பினர் சேவைக்கான உதவித் தலைமைத் தளபதி மற்றும் டி.கே.ஏ.டி முதலீட்டுக் குழுவின் தலைவருமான முஹமட் ஃபாஸி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகளுக்கும் குறையாத 20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 409-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
100,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவித்த நீதிபதி கடப்பிதழை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவையும் பிறப்பித்தார்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)