இன்டர் மியாமி, 19 மார்ச் (பெர்னாமா) -- அர்ஜெண்டினாவின் கோல் மன்னன் லியோனல் மெஸ்சி தமது காற்பந்து வாழ்க்கையில் 900-வது கோலை அடித்து மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தார்.
இன்று அதிகாலை நடைபெற்ற வெற்றியாளார் கிண்ண காற்பந்து போட்டியின் நஷ்வில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்டர் மியாமி கிளப்பிற்கான ஒரே வெற்றி கோலை அடித்தபோது மெஸ்சியின் இந்த வரலாற்றுச் சாதனைப் பதிவானது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமது திறமையை நிரூபிக்கத் தொடங்கிய 38 வயது மெஸ்சி, இச்சாதனையை வெறும் ஏழு நிமிடங்களில் நிகழ்த்தினார்.
எதிரணி கோல் காவலரை வீழ்த்தி, மிக லாவகமா ஏழாவது நிமிடத்தில் அவர் கோல் அடித்தார்.
இதன் வழி, இன்டர் மியாமி அணிக்காக மெஸ்சி அடித்த மொத்த கோல்கள் எண்ணிக்கை தற்போது 81 ஆக உயர்ந்தது.
மெஸ்சி இதுவரை, பார்சிலோனாவுக்காக 672 கோல்களும், பி.எஸ்.ஜி அணிக்காக 32 கோல்களும், அனைத்துலக அளவில் அர்ஜெண்டினா அணிக்காக 115 கோல்களும் அடித்துள்ளார்.
உலக அளவில், 965 கோல்கள் அடித்து கிறிச்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கும் நிலையில், 900-வது கோலை அடித்த மெஸ்சி இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)