கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் 21 லட்சத்து 20-ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் வருமானம் பெற்றதாக, முன்னாள் தரைப்படைத் தளபதி டான் ஸ்ரீ முஹமட் ஹபிசுதீன் ஜந்தான் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அந்நான்கு குற்றச்சாட்டுகளையும் 58 வயதான முஹமட் ஹபிசுதீன் மறுத்து விசாரணைக் கோரினார்.
இராணுவ கொள்முதல் குத்தகை சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதல் இராணுவ தளபதி, முஹமட் ஹபிசுதீன் ஆவார்.
ஒன்பது லட்சது 69,000 ரிங்கிட் நான்கு லட்சத்து 74-ஆயிரத்து 850 ரிங்கிட் நான்கு லட்சத்து 88-ஆயிரத்து 550 ரிங்கிட் மற்றும் ஒரு லட்சத்து 90,000 ரிங்கிட் ஆகிய தொகைகள் முஹமட் ஹஃபிசுதீன்-க்கு சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டதாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதியிலிருந்து 2025-ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிக்கு உட்பட்ட காலக்கட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் அக்குற்றங்களை அவர் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு கள்ளப்பண பரிமாற்றம் பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் துணைப்பிரிவு 4(1)(b)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதேச் சட்டம் துணைப்பிரிவு 4(1) தண்டனை விதிக்கப்படும்.
இதனிடையே, ஈராண்டுகளுக்கு முன்பு சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் 77,000 ரிங்கிட் நிதியைப் பெற்றதாக முஹமட் ஹஃபிசுதீன்-இன் மனைவியான சல்வானி அனுவார் @ கமாருதீன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து, அவரும் அவற்றை மறுத்து விசாரணைக் கோரினார்.
ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவ்விருவரும் விடுவிக்கப்பட்ட வேளையில் இவ்வழக்குகளின் மறுசெவிமடுப்பு வரும் மார்ச் 30-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)