கோலாலம்பூர், ஜனவரி 19 (பெர்னாமா) -- ஊழல் நடைமுறைகளை பெரிய அளவில் எதிர்த்துப் போராடுவதோடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து யாரும் பாதுகாக்கப்படக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், லஞ்சம் கொடுப்பவர்கள் முகவர்கள் அல்லது அதற்கு உடந்தையாக இருந்த எந்தவொரு தரப்பினரும் விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
''ஊழல் செய்பவர்களை வேட்டையாடுவதற்காக நான் கோலாலம்பூருக்கு வந்தேன் என்று நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன. அதில் நான் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. மலேசிய இராணுவப் படைகளில் ஊழல் வழக்குகள் மிக உயர்ந்த நிலையை எட்டும்போது நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். இதற்குப் பிறகு நான் அப்படை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்."
15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதல் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை தொடக்கி வைத்து உரையாற்றும்போது சுல்தான் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
பொதுமக்கள் கவனமாக இருப்பதுடன் எவ்வையாக ஊழல் குற்றங்களையும் கண்டறிந்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் எனவும் மாமன்னர் வலியுறுத்தினார்.
அதேவேளையில் இந்த ஊழல் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM பதவி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் உறுதியாக மற்றும் முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.
மேலும், ஊழல் வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்க அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் மற்றும் அதற்கான சிறப்பு வழிகளை அரசாங்கம் கண்டறியவும் மாமன்னர் தெரிவித்தார்.
இதனிடையே, மக்களின் நல்வாழ்வு, குறிப்பாக, கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளில் RMK13 எனப்படும் 13-வது மலேசிய திட்டம் கவனம் செலுத்த வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நாட்டின் ஒற்றுமை, அடையாளம் மற்றும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக கல்வி முறை தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
''புதிய கல்வி முறையை மேற்கொள்ள வேண்டும் என்றால், அது தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். மலாய்மொழி தேசிய மொழி என்பதால் அது முதன்மை மொழியாக இருக்க வேண்டும். எனவே, வேறு எந்த கல்வி முறையையும் அங்கீகரிக்கும் எந்தவொரு திட்டமும் மலாய் மொழியையும் மலேசிய வரலாற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது மலாய் மொழியை ஏற்கவில்லை என்றால் மலேசியாவில் வசிக்காமல் இருப்பது நல்லது''
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)