Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நம்பிக்கையுடன் புதிய கனவுகளை மலர வைக்கும் 'உகாதி' புத்தாண்டு

19/03/2026 06:10 PM

ரவாங், மார்ச் 19 (பெர்னாமா) -- உலகத்தைப் படைப்பதற்காக ஶ்ரீ பிரம்மதேவர் தேர்ந்தெடுத்த வசந்த கால நாள்களில் உகாதியும் ஒன்று என்று வரலாறு கூறுகின்றது.

அதுமட்டுமின்றி, ஶ்ரீ ராமருக்கு அயோத்தியாவில் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட நாளாகவும், ஶ்ரீ மஹா விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்த நாளாகவும் இன்றைய தினம், தெலுங்கு வம்சாவளியினரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு 'ஸ்ரீ பராபவ நாம உகாதி' என்ற பெயரில் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாள் இம்முறை விழாக்கோலம் கொள்கிறது. 

உகாதி என்ற சொல்லுக்கு 'புதிய பிரபஞ்சம்' அல்லது 'புதிய தொடக்கம்' என்று பொருள்படும் நிலையில்,  இத்திருநாளை, உலகெங்கிலும் உள்ள தெலுங்கு வம்சாவளியினர் இனிதே வரவேற்று கொண்டுகின்றனர்.

அதில், சிலாங்கூர், புக்கிட் இரவாங்கில் உள்ள ஆதிநாராயண ராவ் குடும்பத்தினர் இப்பெருநாளை இன்று காலை பண்பாடு மாறாமல் குடும்பத்தோடும், உற்றார் உறவினர்களோடும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புத்தாண்டில் புத்தாடை அணிந்து, இறைவனை வணங்கிய பின்னர், பிள்ளைகள் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதும் இங்கும் வழக்கமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்டிருக்கும் அறுசுவை நிறைந்த உகாதிப் பச்சடி, முதலில் பிள்ளைகளுக்கு பரிமாறப்படும் என்று கூறிய குடும்பத் தலைவி புஷ்பராணி ஆதிநாராயணராவ், மூலிகைப் போன்று கருதப்படும் அப்பச்சடி தயாரிக்கும் முறை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

''வேப்பம் பூ இருக்கும். பிஞ்சு மாங்காய் இருக்கும். வெள்ளம் எனப்படும்  கறுப்பு சீனியும் இருக்கும். உப்புடன் மிளகு அல்லது பச்சை மிளகாய் சேர்த்து கொள்வோம். உணர்வுகளை மையப்படுத்தும் வகையிலே அவ்வனைத்து ருசிகளும் ஒன்றிணைக்கப்படுகின்றன,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வகை பச்சடியைத் துருவி சமைப்பது ஒருவிதம் என்றாலும், கருப்பு சீனியில் நீர் கலந்து இந்த அறுசுவை பதார்த்தங்களை அவற்றுள் சிறு துண்டுகளாக நறுக்கி அதை பானகமாக தயாரிப்பது மற்றொரு விதம் எனவும் அவர் கூறினார்.

உகாதி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் இராம நவமி கொண்டாடப்படுவதால், அதில்  கலந்து கொள்பவர்களுக்கு இந்த பானகமே அருந்துவதற்கு வழங்கப்படும் என்றார் அவர்.  

பச்சடிக்கு அடுத்த நிலையில் உகாதிக்கு வீட்டில் தயாரிக்கப்பட்டும் சில மரபுமிக்க உணவு வகைகள் குறித்தும் புஷ்பராணி கூறினார்.

"முன்பெல்லாம் தோட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டே அவர்கள் சமையல் செய்வார்கள். அதில் 'மொதபப்பு' குறிப்பிடத்தக்கது. அதாவது கட்டிப்பருப்பு அவற்றுடன் சற்று நெய் கலந்து சாதத்துடன் இறைவனுக்கு படைக்க வேண்டியது இப்பெருநாளின் முக்கிய அம்சமாகும்," என்றும் அவர் விவரித்தார்.

மேலும், உகாதி புத்தாண்டை முன்னிட்டு சிறப்பான முறையில் தயாரிக்கப்படும் பலகாரங்களான பூர்லு, தீயகார்லு, பொங்கடாலு, அரசுலு குறித்து விவரிக்கிறார் குடும்பத் தலைவரான, ஆதிநாராயண ராவ் இராமநாயுடு.

உகாதிக்கு முன்னதாக பொங்கல் தினத்தை சங்கராந்தியாக தெலுங்கு சமூகத்தினர் பெரிய பண்டியகையாகக் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தெலுங்கு பாரம்பரியங்களை பின்பற்றுவதற்கு இன்றைய இளம் தலைமுறையினர் சுணக்கம் கொண்டாலும், அதைக் கற்றுத் தர வேண்டிய கடப்பாட்டை சமூகத்தினர் கொண்டிருப்பதாகக் கூறுகிறார் குடும்பத்தின் மூத்தவரான ஆடரி கோபால் இராமநாயுடு. 

இன்றைய நாளில் தயாரிக்கப்படும் உணவுகள் ஒவ்வொன்றும் வாழ்வின் அர்த்தங்களைப் பரைசாற்றுவதால் பிறந்திருக்கும் இந்நன்நாள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள சிறந்த தொடக்கமாக அமைவதாகவுமளாஆற் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)