கோலாலம்பூர், ஜனவரி 27 (பெர்னாமா) -- 2027 பள்ளித் தவணையில், முதலாம் ஆண்டில் இணையும் ஆறு வயது மாணவர்களின் தகுதியைத் தீர்மானிப்பதற்கான திறன் கண்டறிதல் தேர்வு அமல்படுத்தப்படாது எனும் முடிவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட அச்சோதனை, உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் குழந்தைகளுக்கு பாகுபாடு காட்டக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதால், இவ்விவகாரம் ஆராயப்பட்டதாக அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
''குழந்தைகள் பள்ளியில் சேருவதற்கு முன்பு ஒரு மதிப்பீட்டு முறை இருந்ததால் ஆரம்பத்தில் அத்திட்டம் நன்றாக இருந்தது, ஆனால் அது பின்னர் பாரபட்சமாக மாறும் என்று கருதப்பட்டது. இதன் பொருள், முதலாம் வகுப்பு, பாலர் பள்ளி, தகுதி இல்லாதவர்கள், புத்திசாலிகள் இல்லாதவர்கள் போன்ற பல குழந்தைகள் உள்ளனர். உளவியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படலாம். எனவே, அது ரத்து செய்யப்பட்டது." என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
முதலாம் ஆண்டில் இணையும் ஆறு வயது மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அந்த சோதனையை அரசாங்கம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தயார்நிலையைப் பொறுத்து அடுத்த ஆண்டு முதல் ஆறு வயது குழந்தைகள் முதலாம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்கலாம் என்று 2026-2035 ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய கல்வித் திட்டத்தின் அறிமுக விழாவில் அன்வார் அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)