பாரிஸ், 24 ஜனவரி (பெர்னாமா) -- பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையிலான பிரான்ஸ் சிறுபான்மை அரசாங்கம், எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களிலிருந்து மீண்டும் தப்பியுள்ளது.
அவ்விரண்டில், மரைன் லு பென் தலைமையிலான வலதுசாரி தரப்பினர் ஒரு தீர்மானத்தை முன்வைத்த வேளையில், பசுமைக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அடங்கிய இடதுசாரி கூட்டணி கட்சியால் மற்றொரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
எனினும், அவ்விரு தீர்மானங்களும், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தேவையான 288 வாக்குகளின் முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறின.
இடதுசாரி தரப்பின் தீர்மானத்திற்கு ஆதரவாக 269 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், வலதுசாரி தீர்மானத்திற்கு ஆதரவாக 142 பேர் வாக்களித்தனர்.
மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் சர்ச்சைக்குரிய வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்க Lecornu முடிவு செய்ததால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
லெகோர்னுவின் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றாலும், வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக பல சலுகைகளை வழங்கிய பின்னர், அவர் Sosialis கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ளதால், அவரின் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
இந்நிலையில், அந்த வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்ய, லெகோர்னு சிறப்பு அரசியலமைப்பு செயல்முறையைப் பலமுறை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]