பகாங், ஜனவரி 22 (பெர்னாமா) -- இந்நாட்டில் இனங்களுக்கு இடையில் நிலவும் மொழித் தொடர்பான முடிவில்லா பிரச்சனைகளை நிறுத்துமாறு அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்தார்.
மாறாக, தேசிய கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் உள்நாட்டில் மட்டுமல்ல வட்டார மற்றும் உலகளவிலும் வேலை செய்ய நாட்டின் இளைய தலைமுறையினர் அதிக போட்டித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வதில் தற்போது அரசாங்கத்தின் கவனம் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
''ஏனெனில், மொழி தொடர்பாக இனங்களுக்கு இடையே இனி முடிவற்ற மோதல்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நம் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே நமது முன்னுரிமை. ஏனெனில், அந்தப் பிள்ளைகள் ஆசியப் வட்டாரத்திலும் உலகளவிலும் வேலைகளுக்குப் போட்டியிட தங்கள் நிலையை மேம்படுத்த முடியும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
இன்று, பகாங், பெந்தொங்-இல் உள்ள பெர்திங் சீனப்பள்ளியில் நடைபெற்ற சீன சமூகத்தினருடனான நட்பு விழாவில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)