Ad Banner
Ad Banner
 பொது

இரண்டு குழுக்களை உள்ளடக்கி முதலாம் ஆண்டில் மாணவர்கள்; முன்னேற்பாட்டு பணியில் கல்வி அமைச்சு

30/01/2026 05:19 PM

பேராக், ஜனவரி 30 (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு தொடங்கி இரண்டு குழுக்களை உள்ளடக்கிய முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து பள்ளியின் செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சு பல்வேறு ஆரம்பக்கட்ட முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

ஆறு மற்றும் ஏழு வயதுடைய பிள்ளைகள் ஒரே நேரத்தில் முதலாம் ஆண்டில் சேர்க்கப்படவிருப்பதால் ஆசிரியர் நியமனம் மற்றும் வகுப்பறை வசதிகள் உள்ளிட்ட பள்ளி செயல்பாடுகள் அடிப்படையில் கல்வி அமைச்சு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

ஈப்போ, யூக் டீ இடைநிலைப் பள்ளிக்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ செய்தியாளர்களிடம் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குப் பின்னர் பதிவு செய்யும் ஆறு வயது மாணவர்களின் எண்ணிக்கையை அமைச்சு கண்காணித்து பள்ளி நிலையிலான உண்மையான தேவைகளைத் திட்டமிடும்.

அதே நேரத்தில், பெற்றோர்களும் தங்கள் முடிவுகளை பரிசீலிக்க போதுமான கால அவகாசம் கிடைக்கும்.

''ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஆசிரியர் நியமன விவகாரம் என்பது தேசியப் பள்ளிகள், சீனப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொதுவான ஒரு சவாலாகும். இருப்பினும், கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மடானி அரசாங்கத்தின் கீழ் ஆசிரியர் ஆட்சேர்ப்பு விகிதத்தை அதிகரிக்க நாங்கள் தீவிரமாகப் பணியாற்றியுள்ளோம். இதன் விளைவாக, ஆசிரியர் நியமன விகிதம் 95 சதவீதத்தில் இருந்து தற்போது 97 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது'' என்றார் வோங் கா வோ.

இதனிடையே, ஆசிரியர் நியமனங்களை அதிகரிப்பது குறித்துக் கல்வி அமைச்சு கல்வி சேவை ஆணையத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாகவும் வோங் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)