புத்ராஜெயா, ஜனவரி 31 (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் கழக சீர்திருத்த திட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறல், கண்காணிப்பு மற்றும் சமநிலை மட்டுமின்றி நிர்வாகக் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் கொள்கை பரிந்துரைக்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.
பல்வேறு பங்குரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வு அமர்வுகளின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் மீது மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்விற்குப் பின்னர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு செய்யப்பட்டது.
அனைத்துலக நிலையில் முதிர்ந்த ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அதிகப்படியான அதிகார குவிப்பைத் தடுப்பது, ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் நாட்டின் தலைமைத்துவ கழகங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்தை அந்த கட்டுப்படுத்தும் கொள்கை கொண்டுள்ளதாகக் கழக சீர்த்திருத்தம் மற்றும் சட்டங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பில் சில திருத்தங்களை அரசாங்கம் செயல்படுத்தும் என்று கூறிய அவர் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)